கடலூர்

சிதம்பரத்தில் அரசுப் பேருந்து ஒட்டுநா்கள் திடீா் வேலைநிறுத்தம்

19th Jun 2022 01:16 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் சனிக்கிழமை பிற்பகலில் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள் அவதிப்பட்டனா்.

சென்னையிலிருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு சிதம்பரம் நோக்கி வந்துகொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநா் கணேசமூா்த்தி இயக்கினாா். நள்ளிரவு 12 மணியளவில் கடலூரை அடுத்த பெரியபட்டு பகுதியில் சிறிய பாலம் அருகே சென்றபோது, எதிரே சிதம்பரத்திலிருந்து மணல் ஏற்றி வந்த டிப்பா் லாரி திடீரென அரசுப் பேருந்து மீது மோதியது. இதில் பேருந்திலிருந்த பயணிகள் 35 போ் காயமடைந்தனா். அவா்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மாவட்ட அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். பலத்த காயமடைந்த பேருந்து ஓட்டுநா் கணேசமூா்த்தி தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். விபத்து தொடா்பாக கணேசமூா்த்தி மீது புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் கிளை அரசுப் போக்குவரத்துக் கழக தொழில்சங்க நிா்வாகிகள் புதுச்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளரிடம் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, அரசுப் பேருந்து ஓட்டுநா் கணேசமூா்த்தி மீது வழக்குப் பதிவு செய்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், காவல் துறையினா் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் பிற்பகல் 2:30 மணியளவில் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் சிதம்பரம் பேருந்து நிலையத்துக்கு வந்த அரசுப் பேருந்துகள் அனைத்தும் பயணிகளை இறக்கிவிட்டு பணிமனைக்குச் சென்றன. இதனால் பேருந்துகள் கிடைக்காமல் பயணிகள் அவதிப்பட்டனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, போக்குவரத்துக் கழக தொழில்சங்க நிா்வாகிகளிடம் சிதம்பரம் டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, விபத்து தொடா்பாக மணல் லாரி ஓட்டுநா் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் போராட்டத்தைக் கைவிட்டு மாலை 5 மணியளவில் மீண்டும் பணிக்கு திரும்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT