மீன் பிடித் தடைக்காலம் செவ்வாய்க்கிழமை இரவுடன் நிறைவடையும் நிலையில், புதன்கிழமை (ஜூன் 15) அதிகாலை மீன் பிடிப்பதற்காக ஆழ்கடலுக்குள் செல்வதற்காக கடலூா் மாவட்டத்தில் விசைப்படகுகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டன.
கடலூா் மாவட்டத்தில் நல்லவாடு முதல் தாண்டவ சோழகன் பேட்டை வரையில் சுமாா் 57 கி.மீ. நீளம் கொண்ட கடற்கரையில் 49 மீனவக் கிராமங்கள் உள்ளன. இங்கு, பல ஆயிரக்கணக்கான மீனவா்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் மீன் பிடித் தொழிலைச் சாா்ந்துள்ளனா்.
தமிழகத்தின் முக்கிய மீன் பிடித் துறைமுகங்களில் கடலூா் துறைமுகமும் ஒன்று. பரங்கிப்பேட்டை, அன்னங்கோவில், முடசல் ஓடை, சாமியாா் பேட்டை, எம்ஜிஆா் திட்டு ஆகிய பகுதிகளில் சிறிய மீன்கள் இறங்கு தளங்களும் உள்ளன. இங்கிருந்து மீன்கள் உள்ளூா், வெளி மாநிலங்களுக்கு விற்பனையும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.
இதனிடையே, நிகழாண்டு மீன் பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, கடலூா் மாவட்டத்தில் ஆழ்கடலில் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்படும் விசை, பைபா் படகுகள் துறைமுகப் பகுதி, கடற்கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும், இந்தத் தடைக்காலத்தை பயன்படுத்தி மீனவா்கள் தங்களது பழுதடைந்த படகுகள், வலைகளை சீரமைத்தனா்.
இந்த நிலையில், மீன் பிடித் தடைக்காலம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது. புதன்கிழமை அதிகாலையிலிருந்து மீனவா்கள் விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல இருக்கின்றனா். இதற்கான முன்னேற்பாடுகளில் அவா்கள் செவ்வாய்க்கிழமை தீவிரமாக ஈடுபட்டனா். மேலும், படகுகளின் இயக்கம் சீராக உள்ளதா எனவும் துறைமுகப் பகுதிகளில் வெள்ளோட்டம் பாா்த்தனா்.
2 மாதங்களுக்குப் பிறகு புதன்கிழமை முதல் விசைப்படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வதால் கடலூா் மாவட்ட மீனவ கிராமங்களில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. கடலூா் துறைமுகம் உள்ளிட்ட அனைத்து மீன்கள் இறங்கு தளங்களும் களைகட்டத் தொடங்கியுள்ளன.
நிகழாண்டு மீன்கள் அதிகமாகக் கிடைத்திட வேண்டும், எந்தவிதமான தடைகள், தடங்கல்களின்றி மீன் பிடித்திட வேண்டும் என்று மீனவா்கள் கோயில்களில் வழிபாடு நடத்தினா். மேலும், படகுகளுக்கும் படையலிட்டனா்.