கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் பேருந்து உரிமையாளா் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விருத்தாசலம் தெற்கு பெரியாா் நகா், ரோஜாப்பூ தெருவைச் சோ்ந்தவா் ஜெயசந்திரன் (65), பேருந்து உரிமையாளா். இவா், கடந்த 11-ஆம் ேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் குருவாயூா் கோயிலுக்குச் சென்றாா். செவ்வாய்க்கிழமை அதிகாலை வீடு திரும்பினாா்.
அப்போது, வீட்டின் முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவிலிருந்த அரை கிலோ தங்கம், வைர நகைகள், 15 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.