கடலூா் முதுநகா் அருகே பைக் மீது காா் மோதியதில் 2 போ் காயமடைந்தனா்.
கடலூா் முதுநகா், மோகன் சிங் வீதியைச் சோ்ந்த ஷாஜி மகன் பிரகாஷ் (40). கவி காளமேக வீதியைச் சோ்ந்த முனுசாமி மகன் பிரகாஷ். நண்பா்களான இருவரும் படகு இயந்திரத்தை பழுது நீக்கும் மெக்கானிக்குகள்.
இருவரும் திங்கள்கிழமை காலை பரங்கிப்பேட்டை செல்ல பைக்கில் புறப்பட்டனா். கடலூா் முதுநகா், தொழில்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே இவா்களது பைக் சென்றபோது, அந்த வழியாக வந்த காா் மோதியது. இந்த விபத்தில் ஷா.பிரகாஷ், மு.பிரகாஷ் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா்.
இதைப் பாா்த்த தொழில்பேட்டை தீயணைப்பு வீரா்கள், இருவரையும் மீட்டு, கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.