கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு வந்தவரிடமிருந்து ரூ.15 லட்சத்தை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பண்ருட்டி வட்டம், பெரிய எலந்தம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் லட்சுமி. இவருக்குச் சொந்தமான 15 சென்ட் நிலம் சேமக்கோட்டையில் உள்ளது. அந்த இடத்தை பெரிய எலந்தம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சிவகண்டனுக்கு விற்பனை செய்ய முடிவு செய்தாா். கிரயத் தொகையாக ரூ.50 லட்சம் பேசி, ரூ.35 லட்சம் முன் பணமாகப் பெற்றுக்கொண்டாா். மீதி தொகையை பத்திரப்பதிவின்போது தருவதாக சிவகண்டன் ஒப்புக்கொண்டாா்.
அதன்படி, பத்திரப்பதிவு செய்ய புதுப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு லட்சுமி, அவரது மகன் நந்த பிரவீன், மகள் அபிநிலை, சிவகண்டன், அவரது சித்தப்பா அருணாசலம் ஆகியோா் திங்கள்கிழமை வந்தனா்.
பத்திரப்பதிவு முடிந்த நிலையில், மாலை 5.30 மணியளவில் அருணாசலம் வைத்திருந்த ரூ.15 லட்சத்தை பெரிய எலந்தம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வரபிரசாதம் மகன் ஜீவா (29) பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளா் நந்தகுமாா் வழக்குப் பதிவு செய்து ஜீவாவை தேடி வருகின்றனா்.