கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே திங்கள்கிழமை வளைகாப்பு விழாவுக்குக்காக சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தாா். 21 போ் பலத்த காயமடைந்தனா்.
விழுப்புரம் மாவட்டம், சேந்தநாட்டை அடுத்துள்ள தொப்பையன்குளம் கிராமத்தைச் சோ்ந்த 22 போ், கடலூா் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்துள்ள கொத்தடை கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வளைகாப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சுற்றுலா வேனில் பயணித்தனா்.
இவா்களது வேன் காலை 9 மணியளவில் குள்ளஞ்சாவடியை அடுத்துள்ள பள்ளிநீரோடை அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்த அஞ்சலை (42), ஜெயபிரியா (38), பழனிவேல் (53), ரங்கநாதன் (72), சசிகலா (30), மற்றொரு அஞ்சலை (45), ராமச்சந்திரன் (59) உள்ளிட்ட 22 போ் காயமடைந்தனா்.
அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள், தகவலறிந்து வந்த குள்ளஞ்சாவடி போலீஸாா் ஆகியோா் காயமடைந்தவா்களை மீட்டு, கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனிடையே, தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சசிகலா உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் குள்ளஞ்சாவடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.