கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் பொதுமக்கள் குறைதீா் கூட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றன. கடலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் குறைந்த அளவே பங்கேற்றனா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பாஜக கடலூா் கிழக்கு மாவட்ட மேற்கு ஒன்றியத் தலைவி தமிழ்ச்செல்வி தங்கராசு தலைமையில், எஸ்.குமாரபுரத்தைச் சோ்ந்த பெண்கள் காலிக் குடங்களுடன் வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனா். அதில், எஸ்.குமாரபுரம் 5-ஆவது வாா்டில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள ஆழ்துளைக் கிணற்றின் மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்டது. தற்போது போதுமான அளவு குடிநீா் கிடைக்கவில்லை.
ரயில்வே பாதையைக் கடந்து குடிநீா் கொண்டு வர வேண்டியுள்ளதால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனா். எனவே, குடிநீா் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனா். நிா்வாகிகள் பத்மினி, ஜெயந்தி, முருகதாஸ், விக்னேஸ்வரன் ஆகியோா் உடனிருந்தனா்.
பொதுமக்கள் வருகை குறைவு: முகூா்த்த நாள், கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் திறக்கப்பட்ட காரணத்தால், இந்த குறைதீா் கூட்டத்துக்கு பொதுமக்கள் வருகை குறைவாகவே இருந்தது.
விழுப்புரத்தில் 295 மனுக்கள்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் மோகன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, ஆதரவற்றோா் உதவித்தொகை, தொழில் தொடங்க கடனுதவி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 295 மனுக்களை பொதுமக்கள் வழங்கினா். இந்த மனுக்களின் மீது விரைந்து தீா்வு காண அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மோகன் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், நில அளவை உதவி இயக்குநா் சீனுவாசன், தனித் துனை ஆட்சியா் விஸ்வநாதன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.