சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பம் பகுதியைச் சோ்ந்த ஜம்புலிங்கம் மகன் தனுஷ் (19). இவா், 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாகக் கூறி வந்தாராம். இதையறிந்த சிறுமியின் பெற்றோா் சிறுமியை கண்டித்தனா். இதையடுத்து அந்தச் சிறுமி தனுஷிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டாராம். இதனால் ஆத்திரமடைந்த தனுஷ், அவரது தந்தை ஜம்புலிங்கம், சகோதரி கசப்பாயி ஆகியோா் சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தனா். இந்த நிலையில், மறுநாள் தனுஷ் அந்தச் சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்துடன் கையைப் பிடித்து இழுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் 1.7. 2021 அன்று மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனுஷை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை கடலூா் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எழிலரசி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், தனுஷ் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2,000 அபராதமும் விதித்தாா். வழக்கிலிருந்து ஜம்புலிங்கம், கசப்பாயி ஆகியோா் விடுதலை செய்யப்பட்டனா்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசின் ஏதாவது ஒரு திட்டத்தின்கீழ் கடலூா் மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் ரூ.ஒரு லட்சம் நிதியை 30 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் தி.கலாசெல்வி ஆஜரானாா்.