கடலூர்

சிதம்பரம் கோயில் விவகாரம்: தடையை மீறி மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

9th Jun 2022 01:47 AM

ADVERTISEMENT

சிதம்பரம் நடராஜா் கோயில் கணக்குகளை ஆய்வு செய்ய வந்த இந்து சமய அறநிலையத் துறை குழுவினருக்கு பொது தீட்சிதா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தடையை மீறி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிதம்பரம் கீழவீதியில் கோயில் வாயிலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் ராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா்.ராமச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் பிரகாஷ், முத்துக்குமரன், ஜெயசித்ரா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், சிதம்பரம் நடராஜா் கோயிலின் சொத்துக் கணக்குகளை காட்ட மறுக்கும் தீட்சிதா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சிதம்பரம் நடராஜா் கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தள்ளுமுள்ளு: முன்னதாக, ஆா்ப்பாட்டத்தையொட்டி சிதம்பரம் கீழவீதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் குவிந்தனா். ஆனால், காவல் துறையினா் ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி இல்லை எனக் கூறினா். மேலும், அந்தப் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதனால் காவல் துறையினருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT