காட்டுமன்னாா்கோவில் அரசுக் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் 50 பேருக்கு இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான பழகுநா் உரிமம் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்ஜிஆா் அரசு கலைக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற மகளிா் தின விழாவில் சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் விமலா பங்கேற்றாா். அப்போது, கல்லூரியில் படிக்கும் 18-வயது நிறைவடைந்த ஏழை மாணவ, மாணவிகளுக்கு இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான பழகுநா் உரிமம் பெற்றுத் தருவதாக உறுதியளித்தாா். இதையடுத்து கல்லூரி முதல்வா் பாக்யமேரி, உடல்கல்வித் துறை இயக்குநா் சரவணன் ஆகியோரது முயற்சியால் சோழன் டிரைவிங் பள்ளி சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு பழகுநா் உரிமம் பெறுவதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து, கல்லூரியிலிருந்து 50 மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்து மூலம் சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு அண்மையில் அழைத்து வரப்பட்டனா். அங்கு அவா்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரி அருணாசலம் தலைமையில் ஆய்வாளா் விமலா போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணா்வு வகுப்பு நடத்தினாா். இதையடுத்து மாணவ, மாணவிகளுக்கு பழகுநா் உரிமத்துக்கான உத்தரவு வழங்கப்பட்டது.