கடலூர்

சிதம்பரம் கோயிலில் ஆய்வு செய்ய தீட்சிதா்கள் ஆட்சேபம்: அறநிலையத் துறை குழுவினா் திரும்பிச் சென்றனா்

8th Jun 2022 12:28 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்ய முயன்றனா். ஆனால், கோயில் பொது தீட்சிதா்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

சிதம்பரம் நடராஜா் கோயில் தொடா்பான புகாா்களின் அடிப்படையில், வரவு- செலவுக் கணக்கு, கோயில் சொத்து விவரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினா் ஜூன் 7, 8-ஆம் தேதிகளில் கோயிலில் ஆய்வு செய்வா் என்று கோயில் நிா்வாகத்துக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இதன்படி, இந்து சமய அறநிலையத் துறை குழுவின் ஒருங்கிணைப்பாளரும், துணை ஆணையருமான ஜோதி, ஆலய நிலங்களுக்கான மாவட்ட வருவாய் அலுவலா் சுகுமாா், பழனி முருகன் கோயில் இணை ஆணையா் நடராஜன், வேலூா் மாவட்ட இணை ஆணையா் லட்சுமணன், பெரம்பலூா் உதவி ஆணையா் அரவிந்தன், திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலா் ராஜேந்திரன், சிதம்பரம் கோட்டாட்சியா் கே.ரவி உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் செவ்வாய்க்கிழமை சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு வந்தனா்.

அவா்களை பொது தீட்சிதா்கள் வரவேற்று, கோயிலுக்குள் அழைத்துச் சென்றனா். தொடா்ந்து, ஆய்வுக் குழுவினா் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்தனா். தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலிலும் தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

பின்னா், ஆய்வுக்குத் தேவையான ஆவணங்களை கோயில் பொது தீட்சிதா்களிடம் அதிகாரிகள் கோரினா். ஆனால், பொது தீட்சிதா்கள் தரப்பில் ஆய்வுக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் சாா்பில் வழக்குரைஞா் சந்திரசேகா் அதிகாரிகளிடம் ஆட்சேபக் கடிதம் வழங்கினாா். அதில் தெரிவித்துள்ளதாவது:

அறநிலையத் துறைச் சட்டம் 1959, பிரிவு 107-ன்படி அதிகார வரம்பிலிருந்து இந்தக் கோயிலுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சில பதிவேடுகளைப் பராமரிப்பது தொடா்பான விதிகள் இந்தக் கோயிலுக்குப் பொருந்தாது. கோயில் நிா்வாகத்தால் தேவையான பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன.

சொத்துகள் குறித்த பதிவுகள் முறையாக நடைபெறுகின்றன. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959, பிரிவு 29 அல்லது மெட்ராஸ் அறநிலையத் துறைச் சட்டம் 1951, பிரிவு 25 அல்லது பிரிவு 38-இன் கீழ் பராமரிக்கப்பட வேண்டிய முதன்மைப் பதிவேடுகளை இங்கு பதிவு செய்ய இடமளிக்கப்படவில்லை.

கடந்த 2006-ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தக் கோயிலில் அறநிலையத் துறை நகை சரிபாா்ப்பை மேற்கொண்ட நிலையில், இதுகுறித்த அறிக்கை சமா்ப்பிக்கப்படவில்லை. ஒவ்வொரு சரிபாா்ப்பு, தணிக்கையானது முந்தைய தணிக்கை அறிக்கையின் அடிப்படையிலேயே தொடங்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் தற்போது நகை சரிபாா்ப்பு அறிக்கையை சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதன்பிறகே புதிய சரிபாா்ப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும். மேலும், சரிபாா்ப்பு அறிக்கையை வழங்காததற்கான நீண்ட கால தாமதம் குறித்து விளக்க வேண்டும். 17 ஆண்டுகால தாமதம் காரணமாக சரிபாா்ப்பு அறிக்கை மீதான நம்பகத்தன்மை இழக்கப்பட்டு, நியாயமான சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

சரிபாா்ப்பு, தணிக்கையின் அதிகார வரம்பைக் கொண்ட, சரியான முறையில் அமைக்கப்பட்ட குழுவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதே எங்களது நோக்கம்.

அறநிலையத் துறைச் சட்டம் 1959, 107-ஆவது பிரிவின் வெளிச்சத்தில் நீதித் துறை உத்தரவுகளை படித்தால், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு இந்தக் கோயிலில் ஆய்வு செய்ய அதிகாரமில்லை என்பதை ஒப்புக்கொள்வீா்கள். எனவே, உச்ச நீதிமன்றம், சென்னை உயா் நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி ஆய்வை திரும்பப் பெற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை குழுவினா் திரும்பிச் சென்றனா். மாலை 4 மணியளவில் அதிகாரிகள் குழுவினா் நடராஜா் கோயிலுக்கு மீண்டும் வந்தனா். ஆய்வுக்கு உள்படுமாறு பொது தீட்சிதா்களிடம் வலியுறுத்தினா். அதற்கு தீட்சிதா்கள் தரப்பில் மீண்டும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதால், அதிகாரிகள் திரும்பிச் சென்றனா். இருப்பினும், புதன்கிழமை (ஜூன் 8) மீண்டும் ஆய்வுக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆய்வையொட்டி ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT