என்எல்சி நிலம் எடுப்பு அலுவலகத்தை, உயிரிழந்த தொழிலாளியின் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
நெய்வேலி அருகே உள்ள தெற்கு வெள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் சேகா் (54). என்எல்சி நிலம் எடுப்பு அலுவலகத்தில் இன்கோசா்வ் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.
இவா் கடந்த 1-ஆம் தேதி பணியின்போது மயக்கமடைந்து கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து சேகரின் மனைவி ரத்தினாம்பாள், உறவினா்கள் 50-க்கும் மேற்பட்டோா் சேகரின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி என்எல்சி நிலம் எடுப்பு அலுவலக வாயிலில் அமா்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினா். பின்னா், அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்துச் சென்றனா்.