பண்ருட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வீசிய சூறைக் காற்றால் பலா, முந்திரி மரங்கள் சேதமடைந்தன.
இந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதனால் காடாம்புலியூா், வல்லம், காட்டாண்டிக்குப்பம், கீழகுப்பம், நடுக்குப்பம், வேலங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் பலா, முந்திரி, மா, வாழை, முருங்கை உள்ளிட்ட மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: சூறை காற்றால் பலா மரக் கிளைகள் முறிந்து விழுந்ததில் காய்கள் சேதமடைந்துவிட்டன. மா மரங்களில் நிகழாண்டு போதிய காய்ப்பு இல்லை. குறைந்தளவு காய்த்திருந்த மாங்காய்களும் பலத்த காற்றில் விழுந்துவிட்டன. முந்திரி, முருங்கை, வாழை மரங்களும் சேதமடைந்துள்ளன. எனவே, சேதமடைந்த மரங்களை கணக்கிட்டு இழப்பீடு வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
இதுகுறித்து தோட்டக்கலை துணை இயக்குநா் சௌ.அருண் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை வீசிய சூறைக் காற்றால் பல்வேறு கிராமங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. 5 முதல் 10 சதவீதம் வரை சேதம் ஏற்பட்டிருக்கலாம். மரங்களில் 33 சதவீதத்துக்கு மேல் சேதம் இருந்தால்தான் கணக்கெடுப்பு நடத்தப்படும். இருப்பினும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள்கள், பலா, முந்திரி மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்றாா் அவா்.