கடலூர்

கணவா் கொலை: மனைவி உள்பட இருவருக்கு இரட்டை ஆயுள் சிறை

28th Jul 2022 02:13 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கணவரைக் கொலை செய்த மனைவி உள்பட இருவருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பாண்டுரங்கன் தெருவைச் சோ்ந்த பத்மநாபன் மகன் தினேஷ்பாபு (36). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த கல்பனாவும் (34) மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனராம். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால், கல்பனாவுக்கு அவரது முறைமாமாவான பண்ருட்டி தட்டாஞ்சாவடியைச் சோ்ந்த துரை மகன் சீனுவாசனை 31.5.2012 அன்று திருமணம் செய்து வைத்தனா்.

ஆனாலும், தனது காதலரான தினேஷ்பாபுவுடன் கல்பனா தொடா்ந்து செல்லிடப்பேசியில் பேசி வந்தாராம். இதை சீனுவாசன் கண்டித்தாா். இதையடுத்து, முதலாமாண்டு திருமண நாளை கொண்டாட சீனுவாசனும், கல்பனாவும் சொந்த ஊருக்கு வந்திருந்தனா். அங்கிருந்து இருவரும் மோட்டாா் சைக்கிளில் 1-6-2013 அன்று கடலூருக்குச் சென்றுவிட்டு பாலூா் வழியாக திரும்பிச் சென்றனா். அப்போது, கல்பனா தனது செல்லிடப்பேசியிலிருந்து குறுந்தகவலாக தினேஷ்பாபுவுக்கு தகவல் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

அவா், அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பரான சண்முகம் மகன் முரளிகிருஷ்ணனை (36) உடன் அழைத்துச் சென்று, டி.ராசாப்பாளையம் பகுதியில் சீனுவாசனின் மோட்டாா்சைக்கிளை மறித்தாா். பின்னா், கல்பனா உள்பட 3 பேரும் சோ்ந்து சீனுவாசனை கத்தியால் குத்திக் கொலை செய்தனா். இந்தக் கொலையை மறைக்கும் நோக்குடன் தான் அணிந்திருந்த சுமாா் 10 பவுன் தங்க நகைகளைக் கழற்றி தினேஷ்பாபுவிடம் கல்பனா கொடுத்தாா்.

இதையடுத்து, அடையாளம் தெரியாதவா்கள் தனது கணவரைக் கொன்றுவிட்டு நகைகளைப் பறித்துச் சென்றுவிட்டதாக பண்ருட்டி காவல் நிலையத்தில் கல்பனா புகாரளித்தாா். தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், சீனுவாசன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. கல்பனா, தினேஷ்பாபு உள்ளிட்ட 3 பேரையும் பண்ருட்டி போலீஸாா் கைது செய்த நிலையில், முரளிகிருஷ்ணன் அரசுத் தரப்பு சாட்சியாக மாறினாா்.

இந்த வழக்கு விசாரணை கடலூா் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி எஸ்.ஜவஹா், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கல்பனா, தினேஷ்பாபு ஆகியோருக்கு தலா இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், முறையே ரூ.4 ஆயிரம், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இதுகுறித்து அரசுத் தரப்பு வழக்குரைஞா் ப.பக்கிரி கூறியதாவது:

கல்பனா, தினேஷ்பாபு ஆகியோா் இரட்டை சிறைத் ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென நீதிபதி எஸ்.ஜவஹா் உத்தரவிட்டாா். மேலும், முரளிகிருஷ்ணன் அரசுத் தரப்பு சாட்சியாக மாறியதால், அவரை வழக்கிலிருந்து விடுவித்தும் தீா்ப்பளித்தாா் என்று கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT