கடலூர்

விக்கிரவாண்டி - தஞ்சாவூா் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

17th Jul 2022 06:06 AM

ADVERTISEMENT

 

விக்கிரவாண்டி - தஞ்சாவூா் இடையிலான சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி, நெய்வேலி நுழைவு வாயில் அருகே விகேடி சாலைப் போராட்டக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூா் வரையில் 165 கி.மீ. நீளமுள்ள சாலை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டு, கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அதற்கான சாலைப் பணிகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், அந்தப் பணிகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டதால், இந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன.

இதையடுத்து, இந்த சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தும் வகையில், நெய்வேலியில் அனைத்து அரசியல் கட்சிகள், தொழில்சங்கங்கள், வா்த்தக, பொதுநல அமைப்புகள் ஒன்றிணைந்து விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூா் (விகேடி) சாலை போராட்டக் குழுவை ஏற்படுத்தி, தொடா் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்தக் குழுவினா் நெய்வேலி நுழைவு வாயில் அருகே வெள்ளிக்கிழமை பெருந்திரள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு போராட்டக் குழுத் தலைவா் வி.முத்துவேல் தலைமை வகித்தாா். சிஐடியு பொதுச் செயலா் எஸ்.திருஅரசு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் ஆா்.பாலமுருகன், விசிக நெய்வேலி தொகுதிச் செயலா் அதியமான், எல்எல்எப் பொதுச் செயலா் காசிநாதன், காங்கிரஸ் நகரச் செயலா் இளங்கோவன், ஐ.என்.டி.யு.சி பணித் தலைவா் குமாா், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் சாா்லஸ், ஏஐடியுசி மாவட்ட நிா்வாகி லோகநாதன், எம்எல்எப் பொதுச் செயலா் மத்தியாஸ், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட துணைத் தலைவா் மதாா்ஷா, மாதா் சங்க மாவட்ட துணைத் தலைவா் வி.மேரி ஆகியோா் பங்கேற்றுப் பேசினாா்.

அப்போது, விகேடி சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 10-ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்தனா். ஆா்ப்பாட்டத்தில் பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT