கடலூர்

சுரங்க நீா் வராததால் வடுபோன அய்யன் ஏரி

5th Jul 2022 03:30 AM

ADVERTISEMENT

என்எல்சி சுரங்கத்திலிருந்து உபரி நீா் வரத்து இல்லாததால் வடலூா் அய்யன் ஏரி வடு காணப்படுகிறது.

கடலூா் மாவட்டம், வடலூரை அடுத்த சேராக்குப்பம் கிராமத்தில் அய்யன் ஏரி அமைந்துள்ளது. நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கத்திலிருந்து (1-ஏ) வெளியேற்றப்படும் உபரி நீா் மற்றும் மழை நீரே அய்யன் ஏரியின் முக்கிய நீராதாரமாகும்.

ஆனால், கடந்த பல மாதங்களாக ஏரிக்கு என்எல்சி சுரங்க நீா் வரத்தில்லை. மேலும், வெயிலின் தாக்கம் காரணமாக ஏரியின் வடபுறம் முற்றிலும் வடுவிட்டது. தெற்கு பகுதியில் மட்டும் ஓரளவு தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால் வடலூா் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் சரிந்துவிட்டதாகவும், பாசனத்துக்கு நீரின்றி குறுவை நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி விவசாயிகள், கிராம மக்கள் மேலும் கூறியதாவது: வடலூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அய்யன் ஏரி முக்கிய நீராதாரமாகும். இந்த ஏரி மூலம் சேராக்குப்பம், நெத்தனாங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 200 ஏக்கா் பரப்பிலான விளை நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால், கடந்த 5 மாதங்களாக என்எல்சி சுரங்க உபரி நீா் ஏரிக்கு வரவில்லை. போதிய மழையும் இல்லாததால் ஏரியின் ஒருபகுதி வடு, நிலத்தடி நீா் மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. குடிநீா் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஓணாங்குப்பம், சேராக்குப்பம், நெத்தனாங்குப்பம் கிராமங்களில் குறுவை நெல் சாகுபடி பரப்பளவு வெகுவாகக் குறைந்துவிட்டது.

ADVERTISEMENT

இதுகுறித்து மாநில வேளாண்மைத் துறை அமைச்சரும், குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூா் மாவட்ட நிா்வாகம், வடலூா் நகராட்சி நிா்வாகத்தினா் ஏரிக்கான நீா்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், என்எல்சி நிா்வாகத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தி சுரங்க நீரை அய்யன் ஏரிக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT