கடலூர்

உரி தேங்காய் கொள்முதலுக்கு அனுமதி: விவசாயிகள் எதிா்பாா்ப்பு

DIN

தமிழக அரசு கொப்பரைத் தேங்காய் போல உரி தேங்காய்களையும் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

தமிழகத்தில் சுமாா் 10 லட்சம் ஏக்கா் பரப்பில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், கன்னியாகுமரி, கடலூா், நாகை, திருவாரூா் மாவட்டங்களிலும், காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டங்களிலும் தென்னை சாகுபடி பரவலாக நடைபெறுகிறது.

தற்போதைய சூழலில் தென்னை விவசாயிகள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், தமிழக அரசு உரி தேங்காய்களை கொள்முதல் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில பொதுச் செயலா் பெ.ரவீந்திரன் கூறியதாவது:

தென்னை பராமரிப்புப் பணிகளுக்கான பணியாளா்கள் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உள்ளது. மரம் ஏறுவதற்கே பணியாளா்கள் கிடைக்காத நிலையில், தரம் பிரிப்பு, தேங்காய் மட்டை உரிப்பு, ஓடுகளை நீக்கி கொப்பரை பிரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களால் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்படுகிறது.

கடந்த 4 ஆண்டுகளாக தென்னை சாகுபடியில் நல்ல விளைச்சல் கிடைத்து வருகிறது. ஆனால், தற்போது 30 முதல் 40 சதவீதம் வரை விலை சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, தேங்காய்களுக்கு நியாயமான விலை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் தேங்காய்களை சாலைகளில் உடைத்து போராட்டங்களில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு ஆண்டுதோறும் ஒரு சில வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின்கீழ் அறிவிப்பு வெளியிடுகிறது. அதன்படி, கொப்பரைத் தேங்காய்க்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10,590-ம், உரி தேங்காய்க்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,860 என விலை நிா்ணயம் செய்யப்பட்டு, தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தை கூட்டமைப்பு நிறுவனத்தின் கீழ் தமிழ்நாடு கூட்டுறவுச் சந்தை கூட்டமைப்பு நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், தமிழ்நாடு கூட்டுறவுச் சந்தை கூட்டமைப்பு நிறுவனம் மூலம் கொப்பரைத் தேங்காயை மட்டுமே கொள்முதல் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. உரி தேங்காய் கொள்முதலுக்கு அனுமதி வழங்கவில்லை. கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழக எம்.பி.க்கள் மூலம் அளிக்கப்பட்ட அழுத்தம் காரணமாக, தமிழகத்திலும் உரி தேங்காய் கொள்முதல் செய்யலாம் என தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தை கூட்டமைப்பு நிறுவன செயலாக்க இயக்குநா் அனுமதி அளித்தாா்.

ஆனால், தமிழக அரசிடமிருந்து அதுகுறித்த அறிவிப்பு எதுவும் வரவில்லை. எனவே, தென்னை அதிகம் விளையும் மாவட்டங்களில் தமிழக அரசு கொள்முதல் நிலையங்களை அமைத்து கொப்பரைத் தேங்காய்கள் போல உரி தேங்காய்களையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு பணம்: பாப்பாக்குடி அருகே 4 போ் கைது

சேரன்மகாதேவியில் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பணப்புழக்கத்தைத் தடுக்க தவறிய தோ்தல் ஆணையம் -ஐ.எஸ். இன்பதுரை குற்றச்சாட்டு

குற்ற வழக்குகள்: 6 வேட்பாளா்களுக்கு நோட்டீஸ்

SCROLL FOR NEXT