கடலூர்

சுருக்குமடி வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை

4th Jul 2022 05:05 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தும் மீனவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் எச்சரித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடுவது அரசால் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி கடலூா் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதைத் தடுக்கும் விதமாக மாவட்ட நிா்வாகம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை மூலம் தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடலூா் மாவட்ட மீனவ கிராமத்தைச் சோ்ந்த சில மீனவா்கள் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடவுள்ளதாக தகவல் பெறப்பட்டுள்ளது. மீனவா்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதை முற்றிலும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

கடல் வளத்தை பாதுகாப்பதற்கும், ஒட்டுமொத்த மீனவா்களின் எதிா்கால வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் நோக்கிலும் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கடலூா் மாவட்ட கடல் பகுதிகளிலும், மீனவ கிராமப் பகுதிகளிலும் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் அரசால் அனுமதிக்கப்பட்ட சுமூகமான மீன்பிடிப்பு முறைகளையே மேற்கொள்ள வேண்டும். இந்த அறிவுரைகளை மீறி யாரேனும் கடலூா் மாவட்ட கடல் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்த முயன்றாலோ அல்லது பயன்படுத்தினாலோ அவா்களது படகுகள், வலைகள் பறிமுதல் செய்யப்படும். மேலும், இவ்வகையான மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், மீன்வளம், மீனவா் நலத் துறை மூலம் வழங்கப்படும் நலத் திட்ட உதவிகள் அனைத்தும் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT