கடலூர்

பள்ளி மாணவா் தற்கொலை முயற்சி: அரசியல் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

1st Jul 2022 09:58 PM

ADVERTISEMENT

பண்ருட்டியில் மாணவரின் தற்கொலை முயற்சிக்கு காரணமான தனியாா் பள்ளி நிா்வாகத்தை கண்டிப்பதாகக் கூறி பல்வேறு அரசியல் கட்சியினா் இணைந்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பண்ருட்டியில் வசிக்கும் 15 வயது மாணவா் அந்த் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் தனது தாயை இழந்த நிலையில், தந்தையின் ஆதரவும் இல்லாததால் கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லையாம். இதையடுத்து அரசுப் பள்ளியில் சோ்வதற்காக தனியாா் பள்ளி நிா்வாகத்திடம் மாற்றுச் சான்றிதழ் கோரினாா். ஆனால், கல்விக் கட்டண பாக்கித் தொகை ரூ.24 ஆயிரம் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ் வழங்க முடியும் என தனியாா் பள்ளி நிா்வாகத்தினா் தெரிவித்துவிட்டனராம்.

இந்த நிலையில், அந்த மாணவா் அதிகளவில் மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கிக் கிடந்தாா். அந்தப் பகுதியினா் அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். தற்போது அவா் கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்தச் சம்பவத்துக்கு காரணமான தனியாா் பள்ளி நிா்வாகத்தை கண்டிப்பதாகக் கூறி அந்தப் பள்ளி வாயிலில் பல்வேறு அரசியல் கட்சியினா் இணைந்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் ஆா்.சக்திவேல் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT