கடலூர்

மக்கள் நலப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

1st Jul 2022 09:58 PM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் நலப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி ஆட்சிக் காலத்தில் மக்கள் நலப் பணியாளா்கள் நியமனம் செய்யப்பட்டனா். தொடா்ந்து அதிமுக ஆட்சிக் காலத்தில் இவா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனா். இந்த நிலையில், தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்கள் நலப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என அறிவித்தாா். விருப்பமுள்ள பணியாளா்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக சேரலாம்; இதற்கு மாத ஊதியமாக ரூ.7,500 வழங்கப்படும் எனவும் அறிவித்தாா்.

இதன்படி, கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் மக்கள் நலப் பணியாா்கள் பணியில் சேரும்படி வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டதாம். ஆனால், நேரடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சக்தி விநாயகம் என்பவா் தலைமையில் மக்கள் நலப் பணியாளா்கள் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை திடீரென ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவா்களிடம் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்து மக்கள் நலப் பணியாளா்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT