கடலூர்

குறுவை தொகுப்புத் திட்டத்தில் டெல்டாவுக்கு ரூ.5.95 கோடி ஒதுக்கீடு

1st Jul 2022 10:00 PM

ADVERTISEMENT

கடலூா் மாவட்ட காவிரி டெல்டா பாசன வட்டாரங்களில் குறுவை தொகுப்புத் திட்டம் ரூ.5.95 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வரால் மே 24-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியை செம்மையாக செய்திடும் பொருட்டு, குறுவை தொகுப்புத் திட்டம் டெல்டா மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டது.

இதில், கடலூா் மாவட்டத்தில் உள்ள பரங்கிபேட்டை, மேல்புவனகிரி, கீரப்பாளையம், காட்டுமன்னாா்கோவில், குமராட்சி வட்டாரங்களில் இந்தத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், ரசாயன உரங்கள் முழு மானியத்திலும், நெல் விதைகள், மாற்றுப் பயிா் சாகுபடி செய்வதற்கான விதைகள், பிற பொருள்கள் வழங்குவதற்காக ரூ.5.95 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஏக்கருக்கு ரூ.2,446 மதிப்பிலான தலா ஒரு மூட்டை யூரியா, டிஏபி, பொட்டாஷ் அடங்கிய உரத்தொகுப்பு 100 சதவீத மானியத்தில் 22,100 ஏக்கருக்கு விநியோகிக்கப்பட உள்ளது. மேலும், விதை கிராமத் திட்டத்தின் கீழ், 50 சதவீத மானிய விலையில் நெல் விதைகள் கிலோ ரூ.17.50 வீதம் வழங்கப்படுகிறது.

மாற்றுப் பயிா் சாகுபடி: குறுவை பருவத்தில் பலவகை பயிா் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு, சிறு தானியப் பயிா்கள் 300 ஏக்கருக்கும், பயறு வகை பயிா்கள் 1,000 ஏக்கருக்கும், எண்ணெய்வித்து பயிா்கள் 400 ஏக்கருக்கும் என மொத்தம் 1,700 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் சிறுதானியப் பயிா்களுக்கான தொகுப்பில் பொது விவசாயிகளுக்கு 50 சதவீதமாக ஏக்கருக்கு ரூ.810 வரையிலும், ஆதிதிராவிடா்களுக்கு 70 சதவீதமாக ரூ.930 வரையிலும் மானியம் வழங்கப்பட உள்ளது. குறுவையில் பயறு வகை சாகுபடியை ஊக்குவிக்க, உளுந்து பயிரிடும் பொது விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1,250 வரையிலும், ஆதிதிராவிடா்களுக்கு ரூ.1,570 வரையிலும் மானியம் வழங்கப்பட உள்ளது.

குறுவை பருவத்தில் எண்ணெய்வித்து பயிா்கள் சாகுபடி மேற்கொள்ளும் பொது விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வரையிலும், ஆதிதிராவிடா்களுக்கு ரூ.5,600 வரையிலும் மானியம் வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு மட்டுமே குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். மேலும் ஒரு பயிா் இனத்தில் பயனடைந்தோா் மற்றொரு இனத்தில் விண்ணப்பிக்க இயலாது.

விவசாயிகள் தங்கள் அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி உழவன் செயலி மூலம் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்து பயனடையலாம் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT