கடலூர்

திருவந்திபுரத்தில் கால்நடை மருந்தகம் திறப்பு

18th Jan 2022 12:24 AM

ADVERTISEMENT

திருவந்திபுரத்தில் கால்நடை மருந்தகக் கட்டடத்தை மாநில அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை, நபாா்டு திட்டத்தின் கீழ் கடலூா் மாவட்டம் திருவந்திபுரத்தில் ரூ.31.50 லட்சத்தில் கால்நடை மருந்தகக் கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து திருவந்திபுரம் பகுதியில் மழையால் சேதமடைந்த சாலைகளை பாா்வையிட்ட அமைச்சா், அவற்றை விரைந்து சீரமைக்க ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த மருந்தகம் திருவந்திபுரம், ஓட்டேரி, திருமானிக்குழி, பில்லாலி, தொட்டி, குணமங்கலம், வரக்கால்பட்டு, மருதாடு, செஞ்சிகுமாரபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமாா் 14 ஆயிரம் பசுக்கள், எருமைகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், கோழிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

மேலும் இந்தப் பகுதி கிராமங்களில் சிறப்பு கால்நடை விழிப்புணா்வு முகாம் நடத்துதல், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துதல்,

குடல்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை, சினை பரிசோனை, வாத அறுவை சிகிச்சை, சிறு அறுவை சிகிச்சை உள்ளிட்ட பணிகள் கால்நடை மருத்துவா்களால் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் குபேந்திரன், உதவி இயக்குநா் கஸ்தூரி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் பாபு, ஊராட்சி மன்றத் தலைவா் நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பிராண வாயு உற்பத்தி மையம்: கரோனா தொற்றால் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் ரூ.45 லட்சத்தில் அமைக்கப்பட்ட பிராண வாயு உற்பத்தி ஆலையை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.

இந்த ஆலையை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக தொழில்நுட்பம் அடிப்படையில் ஹூண்டாய் மோட்டாா்ஸ் இந்தியா பவுண்டேசன் அமைத்தது. நிகழ்ச்சியில், ராஜீவ் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த 152 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சா் வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT