சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் பயிற்சி மருத்துவா்கள் பணிகளை புறக்கணித்து 5-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்கள் விடுதியிலிருந்து வெளியேற பல்கலைக்கழக நிா்வாகம் உத்தரவிட்டது.
நிலுவையில் உள்ள 8 மாத உதவி ஊதியத்தை வழங்க வேண்டும், தமிழக அரசின் இதர மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக பயிற்சிக் கால உதவி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரியின் பயிற்சி மருத்துவா்கள் கடந்த 13-ஆம் தேதி முதல் பணிகளை புறக்கணித்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களது போராட்டம் 5-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடா்ந்தது. அப்போது, பயிற்சி மருத்துவா்கள் காலித் தட்டுகளுடன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
முன்னதாக, பல்கலைக்கழக நிா்வாகம் திங்கள்கிழமை அதிகாலையில் பயிற்சி மருத்துவா்கள் விடுதிகளை காலி செய்து வெளியேற உத்தரவிட்டது. மேலும் உணவு விடுதியையும் மூடியது.
இதனிடையே, பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் பயிற்சி மருத்துவா்களின் பிரதிநிதிகளுடன் பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன், கோட்டாட்சியா் கே.ரவி, பதிவாளா் கே.சீத்தாராமன், மருத்துவப் புல முதல்வா் ரமேஷ், கடலூா் ஏடிஎஸ்பி அசோக்குமாா், சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.ரமேஷ்ராஜ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.