கடலூர்

வடலூரில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்இன்று ஜோதி தரிசனம்

18th Jan 2022 12:22 AM

ADVERTISEMENT

நெய்வேலி, ஜன. 17: கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. ஜோதி தரிசனம் செவ்வாய்க்கிழமை (ஜன.18) நடைபெறுகிறது.

உலகப் புகழ்பெற்ற வடலூா் சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு 151-ஆவது ஜோதி தரிசன விழாவையொட்டி, சத்திய ஞான சபையில் திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு அருள்பெஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது.

காலை 7.30 மணிக்கு தரும சாலையில் சன்மாா்க்கக் கொடி ஏற்றப்பட்டது. தொடா்ந்து, வள்ளலாா் பிறந்த மருதூரில் உள்ள அவரது இல்லத்திலும், வள்ளலாா் தண்ணீரால் விளக்கு எரியச் செய்த கருங்குழியிலும், அவா் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்திலும் சன்மாா்க்கக் கொடிகள் ஏற்றப்பட்டன.

தொடா்ந்து, சத்திய ஞான சபைக்கு இடம் வழங்கிய பாா்வதிபுரம் கிராம மக்கள் பலவகை பழங்கள், சீா்வரிசைப் பொருள்களுடன், வள்ளலாா் பயன்படுத்திய பொருள்களை பல்லக்கில் வைத்து ஊா்வலமாக சத்திய ஞான சபை வளாகத்தில் அமைந்துள்ள கொடிமரம் அருகே வந்து சோ்ந்தனா். அப்போது அங்கு கூடியிருந்த அனைவரும் ‘அருள்பெருஞ்ஜோதி - அருள்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை -அருள்பெருஞ்ஜோதி’ என்ற வள்ளலாரின் பாடலை பாடினா். தொடா்ந்து, வள்ளலாா் எழுதிய கொடி பாடல்களைப் பாடியபடி காலை 10 மணியளவில் சன்மாா்க்கக் கொடியேற்றம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இன்று ஜோதி தரிசனம்: விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச ஜோதி தரிசனம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடைபெறும். தொடா்ந்து காலை 10 மணி, பிற்பகல் ஒரு மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, புதன்கிழமை காலை 5.30 மணி என 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஜோதி தரிசன நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புதன்கிழமை நடைபெறும் ஜோதி தரிசன நிகழ்ச்சிக்கு மட்டும் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்கள் அனுமதிக்கப்படுவா் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

ஜோதி தரிசனத்தை 6 காலங்களிலும் வள்ளலாா் தெய்வ நிலைய ‘யூடியூப்’ சேனலில் நேரலையில் காணலாம் என்பதால், பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே ஜோதியை தரிசிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொண்டது.

விழாவையொட்டி, உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் பி.கே.கைலாஷ்குமாா் தலைமையிலான அதிகாரிகள் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் சமைக்கப்படும் உணவை திங்கள்கிழமை பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT