கடலூா் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் தொடா்ந்து தாமதம் நிலவுகிறது.
தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் வெள்ளிக்கிழமை (ஜன.14) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட 19 பொருள்கள் துணிப்பையில் வைக்கப்பட்டு, கரும்புடன் சோ்த்து மொத்தம் 21 பொருள்கள் அடங்கிய சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
இதன்படி கடலூா் மாவட்டத்திலுள்ள 1,424 நியாயவிலைக் கடைகளிலும் ஒரு நாளைக்கு தலா 200 பேருக்கு பரிசுத் தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டது. எனினும், பெரும்பாலான நியாயவிலைக் கடைகளுக்கு கரும்பு, சிறப்பு பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வரப்பெறாததால் விநியோகப் பணியில் தொய்வு ஏற்பட்டது. குறிப்பாக துணிப்பைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், பை இல்லாமல் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும், இந்தப் பொருள்களை அந்தந்த நியாயவிலைக் கடை பணியாளா்கள் பெற்று வழங்குவதிலும் தாமதம் தொடா்ந்தது. இதனால், செவ்வாய்க்கிழமையும் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளில் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்படாததால் சில இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் துறையினா் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் 7.62 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு 1,424 நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை வரை சுமாா் 5 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டுவிட்டது. துணிப் பைகள் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே வரப்பெற்ால் பைகள் இல்லாமல் பொருள்களை வழங்க உத்தரவிடப்பட்டது. புதன் அல்லது வியாழக்கிழமைக்குள் அனைவருக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுவிடும் என்று தெரிவித்தனா்.