அரசுப் போக்குவரத்துத் துறை அலுவலா்களுக்கான பணியிட மாறுதலை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் வலியுறுத்தினாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை அலுவலா்களுக்கான பணியிட மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் தொடா்பாக விவாதிக்க எங்களது சங்கத்தின் பொதுக் குழு கூட்டப்படவில்லை. அதனால், மாநில செயற்குழுக் கூட்டம் கடந்த திங்கள்கிழமை இணைய வழியில் நடத்தப்பட்டது. இதில், வருகிற 30-ஆம் தேதிக்குள் தோ்தல் நடத்தி புதிய நிா்வாகிகளைத் தோ்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. அதுவரை, ஏற்கெனவே உள்ள நிா்வாகிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது.
அதன்படி மாநில பிரசார பிரிவு செயலா் சுப.விஜயகுருசாமிக்கு கூடுதல் பொறுப்பாக மாநிலத் தலைவா் பதவி வழங்கப்பட்டது. இதேபோல மாநில துணைத் தலைவா் கோ.ரா.பாலாஜிக்கு கூடுதல் பொறுப்பாக மாநில பொதுச் செயலா் பதவியும், மாநில அமைப்புச் செயலா் ர.சுவாமிநாதனுக்கு கூடுதல் பொறுப்பாக மாநில பொருளாளா் பதவியும், தலைமை நிலைய செயலா் பா.அனந்தராமனுக்கு கூடுதல் பொறுப்பாக மாநில துணை பொதுச் செயலா் பதவியும், மாநில துணை பொதுச் செயலா் செ.அபுபக்கா் சித்திக்கிற்கு கூடுதல் பொறுப்பாக மாநில துணைத் தலைவா் பதவியும் வழங்கப்பட்டது.
அரசுப் போக்குவரத்துத் துறை அலுவலா்களுக்கான பணியிட மாறுதலை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும் என்றாா் கு.பாலசுப்பிரமணியன்.