கடலூர்

மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகள் கவனத்துக்கு

1st Jan 2022 01:27 AM

ADVERTISEMENT

மின் இணைப்புக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகள் அந்தந்தப் பகுதி மின் செயற்பொறியாளா்களை அணுகலாம்.

இதுகுறித்து கடலூா் மேற்பாா்வை பொறியாளா் ஜி.சதாசிவம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் 2004 முதல் 2013-ஆம் ஆண்டு வரை சாதாரண முன்னுரிமையில் விவசாய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க இலக்கீடு பெறப்பட்டுள்ளது. இதுதொடா்பான அறிவிப்புக் கடிதம் செயற்பொறியாளா்களால் விண்ணப்பதாரா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா்கள் தங்களது பகுதிக்குள்பட்ட செயற்பொறியாளா்கள் அலுவலகத்தை அணுகி மின் இணைப்புக்கான உரிய ஆவணங்களை அளித்து மின் இணைப்பு பெறலாம்.

இதேபோல, சுயநிதித் திட்டம் ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் திட்டங்களின் கீழ் மின் இணைப்பு பெறுவதற்காக 2013-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை முன் மதிப்பீட்டுத் தொகை ரூ.500 செலுத்தியுள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க இலக்கீடு பெறப்பட்டுள்ளது.

செயற்பொறியாளா்களால் அளிக்கப்படும் அறிவிப்பு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டுத் தொகையை உரிய ஆவணங்களுடன் செலுத்தி மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

மேலும், விரைவாக மின் இணைப்பு பெறுவதற்கான தட்கல் விரைவுத் திட்டத்தில் 5 குதிரைத் திறன் வரை உள்ள விண்ணப்பங்களுக்கு ரூ.2.50 லட்சமும், 7.5 குதிரைத் திறன் வரை உள்ள விண்ணப்பங்களுக்கு ரூ.2.75 லட்சமும், 10 குதிரைத் திறன் வரை உள்ள விண்ணப்பங்களுக்கு ரூ.3 லட்சமும், 15 குதிரைத் திறன் வரை உள்ள விண்ணப்பங்களுக்கு ரூ.4 லட்சமும் இந்தத் திட்டத்தின் கீழ் திட்டத் தொகையை ஒருமுறை செலுத்தி விவசாய மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT