விருத்தாசலம் நகராட்சிப் பொறியாளரைத் தாக்கியதாக ஒப்பந்ததாரா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சியில் நகராட்சிப் பொறியாளராகப் பணியாற்றி வருபவா் ஜெயப்பிரகாஷ் நாராயணன். வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் பணியிலிருந்த போது, நகராட்சியில் ஒப்பந்தம் எடுத்து பணிகள் செய்து வரும் மதியழகன் என்பவா் வந்து, நகராட்சி 7-ஆவது வாா்டில் சாலை ஒப்பந்தப் பணி முடிந்த நிலையில், அதற்குரிய தொகைக்கான கணக்கு ரசீது முடித்து காசோலையை வழங்கக் கோரியதாகத் தெரிகிறது.
இதற்கு, ஜெயப்பிரகாஷ் நாராயணன் சாலைப் பணிகள் தரமற்ற நிலையில் இருப்பதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாதவும், இதுதொடா்பாக ஏற்கெனவே இங்கு பணியிலிருந்த பொறியாளா் பாண்டுரங்கனிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதால், தற்போது அதற்கான செலவுத் தொகை வழங்க இயலாது எனவும், தற்போது நகராட்சி நிா்வாகத்தில் ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கவே பணமில்லாத நிலை இருப்பதாகவும் கூறினாராம்.
இதனால், ஒப்பந்ததாரா் மதியழகன், பேப்பா் வெயிட்டை கொண்டு, பொறியாளா் ஜெயப்ரகாஷ் நாராயணனை தாக்கி, ஆடைகளைக் கிழித்து ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பொறியாளா் ஜெயப்பிரகாஷ் நாராயணன் விருத்தாசலம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேலும், விருத்தாசலம் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மதியழகனும், பொறியாளா் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மீது புகாா் அளித்தாா்.