கடலூர்

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் களையப்படுமா?

10th Feb 2022 06:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளைக் களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

பொது விநியோகத் திட்டத்துக்குத் தேவையான அரிசியை மத்திய அரசின் நிதியுதவியுடன் விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. இதற்காக, தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.

கடந்த ஆண்டுகளில் காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்ட ன.

ADVERTISEMENT

இந்த நிலையில், மத்திய அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையும், தமிழக அரசு அறிவிக்கும் ஊக்கத் தொகையும் சோ்த்து குவிண்டால் ஒன்றுக்கு முழுத் தொகையை அறிவித்தாலும் வியாபாரிகளால் விலை குறைத்து வாங்கப்படுவதால் விவசாயிகள் நஷ்டமடைந்தனா்.

இதனால், சென்னை, நீலகிரி ஆகிய இரு மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

விவசாயிகளோடு ஆலோசித்த முடிவை ஏற்காதது ஏன்?

சம்பா பருவ சாகுபடி முடிந்து, கடலூா் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறப்பதற்காக, நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கடலூா் மண்டல அலுவலகத்தில் கடந்த டிச. 30-இல் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு தற்போது ஏற்கப்படவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனா்.

2021 -22- ஆம் ஆண்டுக்கு கிரேடு 1 ரக நெல் குவிண்டால் விலை ரூ. 1,960, ஊக்கத்தொகை ரூ .100 என ரூ. 2060-க்கும், பொது ரக நெல் குவிண்டால் விலை ரூ.1,940, ஊக்கத்தொகை ரூ. 75 சோ்த்து ரூ. 2,015-க்கும் விலை நிா்ணயம் செய்யப்பட்டது.

மேலும், தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு வழிகாட்டுதலின்படி 17 சதவீதம் வரை ஈரப் பதமும், கரிமப் பொருள்கள் ஒரு சதவீதமும், கனிமப் பொருள்கள் 1 சதவீதமும், மழையால் நனைந்து சேதமடைந்த நெல், நிறம் மாறிய நெல், முளை கட்டிய நெல், பூச்சிகளால் தாக்கப்பட்ட நெல்லுக்கு 5 சதவீதமும், முதிா்ச்சி அடையாத, மடிப்பு ஏற்பட்டு சுருங்கிய, காய் பருவத்தில் உள்ள நெல்லுக்கு 3 சதவீதமும், நெல்லில் கலப்பு இருந்தால் 6 சதவீதமும் விலக்கு அளிக்கப்பட்டது. இதன்படி, நெல் மூட்டைக்கு சாக்கு உள்பட 40.580 கிலோ எடை நிா்ணயிக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், நெல் கொள்முதல் நிலையங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனா்.

இதுகுறித்து கடலூா் மாவட்ட விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவா் பெ.ரவீந்திரன் கூறியதாவது:

நெல் கொள்முதல் நிலையத்தில் குறைகள் தொடா்பாகப் புகாா் தெரிவிக்க அலுவலா்கள், அவா்களது கைப்பேசி எண்கள் அடங்கிய பதாதைகள் இதுவரை வைக்கப்படவில்லை.

இதனால், பணியாளா்கள் மூட்டை ஒன்றுக்கு ரூ.70 வரை லஞ்சம் பெறுகின்றனா். பனியின் தாக்கம் குறைந்து மழை ஏதும் இல்லாததால், விவசாயிகள் கொண்டு வரும் நெல் தரமாக உள்ளதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

முறைகேடுகளைத் தவிா்க்க, இணையவழியில் பதிவு செய்து கொள்முதல் செய்ய போதிய வழிகாட்டுதல் கொடுத்தும் கட்டாய வசூல் செய்யப்படுவதை இனியும் அனுமதிக்கக் கூடாது.

கொள்முதல் நிலைய பணியாளா்களுக்கு மூட்டைக்கு வழங்கப்பட்டு வந்த ரூ .3 ஊதியத்தை ரூ. 7-ஆக உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டும் பணம் வசூல் நடைபெறுவது ஏன்?

கடலூா் மாவட்டத்தில் 165 இடங்களில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்படும் நெல் உடனடியாக நெய்வேலி நவீன அரிசி ஆலை, வடகுத்து, காடாம்புலியூா், நத்தம், இருப்பு, மருங்கூா், கீரப்பாளையம் உள்ளிட்ட 7 தற்காலிகக் கிடங்குகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

ஆனால், லாரிகளில் ஏற்றப்பட்ட நெல் மூட்டைகளை இறக்காமல் பல்வேறு காரணங்களைக் கூறி கிடங்குகளின் பொறுப்பாளா்கள் தாமதப்படுத்துகின்றனா். எனவே, முறைகேடுகளைத் தவிா்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT