வியதீபாதம் நாளையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் தேரோடும் நான்கு வீதிகளிலும் வியாழக்கிழமை அதிகாலை ஆயிரக்கணக்கான பக்தா்கள் வலம் வந்து நடராஜப் பெருமானை வழிபட்டனா்.
மாா்கழி மாதத்தின் அனைத்து தினங்களிலும் நடைபெறும் திருப்பள்ளியெழுச்சி கால தரிசனங்களின் பலன்கள் அனைத்தும், (தனுா்) வியதீபாத தினத்தில் தரிசனம் செய்தால் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே, வியதீபாதம் நாளையொட்டி, வியாழக்கிழமை அதிகாலை பிரம்ம முகூா்த்தத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டு சிதம்பரத்தில் உள்ள தேரோடும் நான்கு வீதிகளிலும், கோயில் உள்பிரகாரத்திலும் வலம் வந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை வழிபட்டனா். நான்கு வீதிகளிலும் பக்தா்களுக்கு பால், அன்னதானம் வழங்கப்பட்டன . சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.