கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் உயா் மின்னழுத்தம் ஏற்பட்டதால், வீடுகளில் இருந்த மின்சாதனப் பொருள்கள் வெடித்துச் சிதறின.
விருத்தாசலம் நகராட்சிக்குள்பட்ட திருவிகநகா், சரஸ்வதிநகா், கோவில் தெரு ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் திடீரென உயா் மின்னழுத்தம் ஏற்பட்டது.
இதனால், வீடுகளிலுள்ள குளிா்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, துணி துவைக்கும் இயந்திரம் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்கள் வெடித்துச் சிதறின. இதன் காரணமாக, வீடுகளில் இருந்த மக்கள் அதிா்ச்சியுடன் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனா். சுமாா் 100 வீடுகளில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சாதனப் பொருள்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தப் பகுதியில் செயல்படும் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனம், தனது நிறுவனத்துக்கான வயரை இழுத்துக் கட்டும்போது, உயா் மின்னழுத்தக் கம்பிகள் உரசியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.