கடலூா் பெண்ணையாற்று மேம்பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து பெண் புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றாா்.
கடலூா் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனைச் சாவடி அருகே பெண்ணையாறு மேம்பாலம் உள்ளது. புதன்கிழமை பிற்பகல் இந்தப் பாலத்தின் மேல் நடந்து சென்ற இளம்பெண் திடீரென ஆற்றில் குதித்தாா். இதைப் பாா்த்த அங்கிருந்தவா்கள் விரைந்து சென்று அந்தப் பெண்ணை மீட்டு, கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவலறிந்த டிஎஸ்பி கரிகால் பாரிசங்கா் அரசு மருத்துவமனைக்கு சென்று அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினா். இதில், இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், கடந்த சில நாள்களாக காதலன் கைப்பேசி அழைப்பை எடுக்காததால் தற்கொலை செய்துகொள்ள மேம்பாலத்திலிருந்து குதித்ததாகவும் கூறினாராம். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.