கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே உள்ள சுப்ரமணியபுரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களையும் அகற்றும் கோட்டாட்சியரின் உத்தரவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
இதுதொடா்பாக அந்தக் கட்சியின் மாநில அமைப்புச் செயலா் தி.ச.திருமாா்பன், மாவட்டச் செயலா் சா.முல்லைவேந்தன் ஆகியோா் அளித்த மனு:
சுப்ரமணியபுரம் கிராமத்தில் நிலவும் கொடிக்கம்பம் பிரச்னை தொடா்பாக கடந்த 8-ஆம் தேதி கோட்டாட்சியா் அதியமான் கவியரசு தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, சுப்ரமணியபுரத்தில் உள்ள அனைத்துக் கொடிக்கம்பங்களையும் அகற்ற வேண்டும் என கோட்டாட்சியா் வற்புறுத்தினாா். இதை நாங்கள் (விசிக) ஏற்கவில்லை.
இந்த நிலையில், வருகிற 12-ஆம் தேதிக்குள் அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்றிக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த உத்தரவை நிறுத்திவைத்து, ஆட்சியா் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட வேண்டும். சுப்ரமணியபுரத்தில் விசிக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களையும் அகற்றாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனா்.