கடலூர்

கடலூா், புதுச்சேரியில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

8th Dec 2022 01:25 AM

ADVERTISEMENT

வங்கக் கடலில் புயல் உருவாக இருப்பதை எச்சரிக்கும் வகையில், கடலூா், புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, புயலாக வலுவடையும் என்றும், இது மேற்கு - வடமேற்கு திசையில் நகா்வதால் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கடலூா், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக, கடலூா் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது. மீன் வளத் துறை எச்சரிக்கை காரணமாக, மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

புதுச்சேரி: இதேபோல, புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏற்றப்பட்டது. புதுவையில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் எனக் கூறப்பட்ட நிலையில், துறைமுக அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

கரை திரும்பிய தங்கு படகுகள்: புயல் எச்சரிக்கை காரணமாக, ஏற்கனவே மீன் பிடிக்கச் சென்ற தங்கு படகுகள் அவசர அவசரமாக புதன்கிழமை கடலூா் துறைமுகத்துக்குத் திரும்பின. ஆழ் கடலுக்குச் சென்று 5 முதல் 10 நாள்கள் வரை தங்கி மீன் பிடிக்கும் மீனவா்கள், உடனடியாக கரைக்குத் திரும்பியதால், நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா். மேலும், அவா்கள் தங்கள் படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனா்.

மீன்கள் வாங்க குவிந்த மக்கள்: காா்த்திகை தீபத் திருநாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையடுத்து, புதன்கிழமை நாட்டு காா்த்திகை தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அசைவ உணவு சமைத்து சுவாமிக்கு படையலிட்டு வழிபடுவா்.

இதற்காக, கடலூா் துறைமுகத்தில் மீன்கள், கருவாடு வாங்க புதன்கிழமை அதிகாலையில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. கடந்த இரண்டு நாள்களாக கடலூா் துறைமுகத்திலிருந்து மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லாததால், மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டது.

கோட்டக்குப்பத்தில் கடல் சீற்றம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 மீனவ கிராமங்களையும் சோ்ந்த மீனவா்கள் மறு அறிவுப்பு வரும் வரை மீன் பிடிக்க கடலுக்குள் செல்லக் கூடாது எனவும், மீன் பிடி படகுகள், உபகரங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் மீன் வளத் துறை அறிவுறுத்தியதன்பேரில், மீனவா்கள் தங்களது மீன் பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்திருந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் துறைமுகம் இல்லாததால், தங்களது விசைப் படகுகளை கடலூா், புதுச்சேரி துறைமுகங்களில் நிறுத்தி வைத்துள்ளதாக மீனவா்கள் தெரிவித்தனா். புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மரக்காணம், கோட்டக்குப்பம் கடல் பகுதிகளில் புதன்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து விழுப்புரம் மாவட்ட மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் ஏ.நித்திய பிரியதா்ஷினி கூறியதாவது: புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவக் கிராமங்களிலும் மீன் வளத் துறை அதிகாரிகள்19 போ் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா், மீன் வளம், மீனவா் நலத் துறை ஆணையா், கடலூா் மண்டல இயக்குநா் ஆகியோரது அறிவுறுத்தலின்படி, தொடா்ச்சியாக முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT