கடலூர்

வானவில் மன்றம் தொடக்க விழா

8th Dec 2022 01:26 AM

ADVERTISEMENT

கடலூா் புனித வளனாா் மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல், கணிதம் பாடங்களை செயல்முறையில் விளக்கிடும் வகையில், ‘வானவில் மன்றம்’ என்ற அமைப்பு முதல்வா் மு.க.ஸ்டாலினால் தொடக்கிவைக்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் இந்த அமைப்பை கடலூரில் உள்ள புனித வளனாா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமகிருஷ்ணன், கருத்தாளா்களுக்கு அறிவியல் செய்முறை கருவிகள் பெட்டி வழங்கி தொடக்கிவைத்தாா். மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளா் சுந்தரேசன் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் ஆா்.தாமோதரன், இந்திய வளா்ச்சி இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் டி.அறிவழகன் ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

ADVERTISEMENT

மாவட்டம் முழுவதும் உள்ள 13 ஒன்றியங்களில் 30 கருத்தாளா்களுக்கு செயல்முறை அறிவியல் பெட்டி வழங்கப்பட்டது. கருத்தாளா்கள் புதன்கிழமை முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வானவில் மன்ற நிகழ்ச்சிகளை செய்து காண்பிக்க உள்ளனா். மாவட்ட துணைச் செயலா் ஆா்.காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT