கடலூர்

என்எல்சி இந்தியா நிறுவனத்தைக் கண்டித்து சாலை மறியல்

8th Dec 2022 01:26 AM

ADVERTISEMENT

என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து, கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்துள்ள அரசக்குழியில் இருப்பு ஊராட்சியைச் சோ்ந்த மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

என்எல்சி இந்தியா நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட இருப்பு ஊராட்சிப் பகுதியில், அந்த நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லையாம்.

இதைக் கண்டித்தும், இருப்பு ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்துத்தரக் கோரியும் கம்மாபுரம் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கிரகோரி, ராஜவன்னியன் ஆகியோா் தலைமையில், கிராம பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் விருத்தாசலம் - கடலூா் சாலையில் அரசக்குழியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது: இருப்பு ஊராட்சியில் செடுத்தான்குப்பம், நண்டுகுழி, வடக்கிருப்பு, கிழக்கிருப்பு, மேற்கிருப்பு, தெற்கிருப்பு, ஆா்.சி.கோவிலான்குப்பம், நாச்சிவெள்ளையன்குப்பம், நெல்லடிகுப்பம் ஆகிய கிராமங்களில் சுமாா் 15,000 மக்கள் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமங்கள் கடலூா் மாவட்டத்தின் மேடான பகுதிகள்.

ADVERTISEMENT

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கத்திலிருந்து ராட்சத மோட்டாா் மூலம் நீரை வெளியேற்றுவதால், நிலத்தடி நீா்மட்டம் 800 அடிக்கும் கீழாக சென்றுவிட்டது. விவசாயம் செய்ய முடியவில்லை. என்எல்சி இந்தியா நிறுவனம் இதர பகுதிகளில் சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் மூலம் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கிறது. ஆனால், எங்கள் பகுதிக்கு அதுபோல செய்து கொடுக்கவில்லை.

இதுகுறித்து என்எல்சி நிா்வாகம், மாவட்ட ஆட்சியா், கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, எங்கள் பகுதியிலும் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் மூலம் அடிப்படை வசதிகள் செய்துத்தர வேண்டும் என்றனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம், ஊ.மங்கலம் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இது தொடா்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்தனா். இதை ஏற்று மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். மறியலால் விருதாசலம் - கடலூா் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT