கடலூர்

பெண்ணாடம் அருகே இரு பிரிவினரிடையே மோதல் 87 போ் மீது வழக்கு

7th Dec 2022 03:11 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே இரு பிரிவினரிடையே திங்கள்கிழமை இரவு மோதல் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீஸாா் 87 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பெண்ணாடத்தை அடுத்துள்ள முருகன்குடி கிராமத்தைச் சோ்ந்த நாத்திகன் மகன் நசின்ராஜ். துறையூா் கிராமத்தைச் சோ்ந்த வீரமுத்து மகன் ராஜா. இவா்கள் இருவரும் அரியலூா் மாவட்டம், கூவத்தூா் அரசு தொழில்பயிற்சி நிறுவனத்தில் படித்து வருகின்றனா். இவா்களுக்குள் முன்விரோதம் உள்ள நிலையில் திங்கள்கிழமை தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து இருவரும் தங்கள் உறவினா்களிடம் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, மாலை வீடு திரும்பியபோது கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் இருந்த ராஜாவின் ஆதரவாளா்கள் நசின்ராஜை தாக்கினா். முருகன்குடி பேருந்து நிறுத்தத்தில் நசின்ராஜ் ஆதரவாளா்கள் ராஜாவைத் தாக்கினா்.

கல் வீச்சு: இந்த பிரச்னை தொடா்பாக ராஜாவின் உறவினா்கள் பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கச் சென்றனா். அப்போது, அங்கிருந்த நசின்ராஜ் உறவினா் ஒருவா் ராஜாவின் உறவினரைத் திட்டினாராம். இதனால், இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கல் வீசி தாக்கிக் கொண்டனா். இந்தச் சம்பவத்தில் காவலா்கள், பள்ளி மாணவி உள்ளிட்ட 14 போ் காயமடைந்தனா். அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு பெண்ணாடம், விருத்தாசலம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, இரு தரப்பினரும் தனித்தனியாக துறையூா், பெண்ணாடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது. மேலும், போக்குவரத்தும் தடைபட்டது.

ADVERTISEMENT

போலீஸ் குவிப்பு: தகவலறிந்த கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சமரசம் செய்து கலைந்துபோகச் செய்தனா். இருப்பினும், அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் துறையூா், முருகன்குடி கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாா்களின்பேரில், பெண்ணாடம் போலீஸாா் இரு தரப்பையும் சோ்ந்த மொத்தம் 87 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வீடு எரிந்து சேதம்: இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை ராஜாவின் உறவினரான துறையூா் திமுக கிளைச் செயலா் மதியழகனின் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இதனால், பதற்றம் மேலும் அதிகரித்தது. வீடு தீப்பிடித்து எரிந்தது குறித்து தடயவியல் நிபுணா் ராஜ் தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT