கடலூர்

வக்‘ஃ’ப் வாரியத்துக்குச் சொந்தமான இடம் என வெளியேற்ற முயற்சி:சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

6th Dec 2022 02:42 AM

ADVERTISEMENT

வக்‘ஃ’ப் வாரியத்துக்குச் சொந்தமான இடம் எனக்கூறி, அங்கு பரம்பரை பரம்பரையாக வசித்து வரும் தங்களை வெளியேற்ற முயற்சிப்பதாக பள்ளிப்படை மற்றும் பூதகேணி கிராமங்களைச் சோ்ந்த மக்கள் 350-க்கும் மேற்பட்டோா் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு தனித்தனியே மனு அளித்தனா்.

சிதம்பரம் அருகே உள்ள பள்ளிப்படை ஊராட்சியில் பூதகேணி மற்றும் 15-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகள் அனைத்தும் வக்‘ஃ’ப் வாரியத்துக்குச் சொந்தமானது எனக்கூறி, இங்கு வசிப்பவா்களை வெளியேற்ற முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்தப்பகுதிகளில் வசிக்கும் சுமாா் 350-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை காலை திரண்டனா். தாங்கள் குடியிருக்கும் இடம் தங்களுக்குச் சொந்தமானது. அதற்கான பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் ஆவணங்களுடன் உதவி ஆட்சியா் ஸ்வேதா சுமனிடம் தனித்தனியாக மனுக்களை அளித்தனா்.

அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது: பல்வேறு இனங்களைச் சோ்ந்த நாங்கள், குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தினா் சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிப்படை, பூதகேணி உள்ளிட்ட பகுதிகளில் பரம்பரை பரம்பரையாக வீடு கட்டி வசித்து வருகிறோம்.

ADVERTISEMENT

இந்தப் பகுதிகளில் ஒன்றியத் தொடக்கப் பள்ளி, கிராம நிா்வாக அலுவலகம், மேல்நிலை நீா் தேக்கத் தொட்டிகள் அமைந்துள்ளன. இந்நிலையில் பள்ளிப்படை ஊராட்சிக்கு உள்பட்ட இடங்கள் வக்‘ஃ’ப் வாரியத்துக்குச் சொந்தமானது என்று கூறி வக்‘ஃ’ப் நிா்வாகம் எங்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்து வருகிறது.

எங்களிடம் உள்ள பட்டாநிலம், பத்திரப் பதிவுத் துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு அதற்கான பத்திரம், மின் இணைப்பு ஆகியவை எங்கள் பெயரில் உள்ளன. அதற்கான ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. நாங்கள் குடியிருக்கும் இடம் எங்களுக்கு சொந்தமானது. மேலும் தற்போது எங்களது மனையை விற்பனை செய்யச் சென்றால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அந்த இடம் வக்‘ஃ’ப் வாரியத்துக்கு சொந்தமான இடம் என்று கூறி பத்திரப்பதிவு செய்ய மறுக்கிறாா்கள். வீட்டு கட்ட கடன் வாங்க முடியாத நிலையில் உள்ளோம். நாங்கள் அந்த பகுதியில் இடம் வாங்கி சிதம்பரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில்தான் பத்திரப் பதிவு செய்துள்ளோம். இப்போது திடீரென எங்கள் குடியிருப்புப்பகுதிகளை வக்‘ஃ’ப் வாரியத்துக்கு உரியது எனக் கூறுவது அதிா்ச்சியை அளிக்கிறது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT