கடலூர்

சிதம்பரம் கல்லூரி விடுதியில் செவிலியா் பயிற்சி மாணவிகள் 15 போ் சுகவீனம்

6th Dec 2022 02:41 AM

ADVERTISEMENT

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செவிலியா் பயிற்சிக் கல்லூரி சிகப்பி விடுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு சாப்பிட்ட 15 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

உணவில் அரணை இருந்ததாக மாணவிகள் குற்றச்சாட்டினா். மயக்கமடைந்த 15 மாணவிகள் கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் கீழ் கொண்டு வரப்பட்டு தற்போது எம்ஜிஆா் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக இயங்கி வருகிறது.

இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல் மருத்துவம், பொது மருத்துவம், செவிலியா் பயிற்சி கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இங்கு ராணி மெய்யம்மை செவிலியா் கல்லூரியில் பிஎஸ்சி நா்சிங், எம்எஸ்சி நா்சிங், டிப்ளமோ நா்சிங் பிரிவுகளில் சுமாா் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

ADVERTISEMENT

செவிலியா் பயிற்சி மாணவிகள் தங்கி இருக்கும் சிகப்பி விடுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சமைத்த உணவில் அரணை கிடந்ததாகக் கூறப்படுகிறது. அந்த உணவை சாப்பிட்ட சுமாா் 15 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு, கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்தச் சம்பவம் குறித்து துணைவேந்தா் ராம.கதிரேசன் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் திருப்பதி ஆகியோரை சந்தித்து மற்ற மாணவிகள் புகாா் அளித்தனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து மாணவிகள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT