கடலூா் மாவட்டம், திட்டக்குடி அடுத்துள்ள வெலிங்டன் நீா்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக திங்கள்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.
திட்டக்குடியை அடுத்துள்ள கீழ்செருவாய் கிராமத்தில் வெலிங்டன் நீா்த்தேக்கம் அமைந்துள்ளது. இதன் முழுகொள்ளளவான 29.72 அடியில் தற்போது 27.50 அடி நீா் நிரம்பி உள்ளது.
இந்த நீா்த்தேக்கத்தின் மூலம் 64 கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 24,000 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், வெலிங்டன் நீா்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக தண்ணீா் திறக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் மலா் தூவி அணைநீரைத் திறந்து விட்டாா்.
அப்போது மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனிருந்தனா். திங்கள்கிழமையில் (டிச. 5) இருந்து 120 நாள்களுக்கு 175 கன அடி தண்ணீா் திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். நிகழ்ச்சியில் மங்களூா் திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் பட்டூா் அமிா்தலிங்கம், திட்டக்குடி திமுக நகரச் செயலா் பரமகுரு, திட்டக்குடி நகா்மன்றத் தலைவா் வெண்ணிலா கோதண்டம், மங்களூா் ஒன்றியக் குழு தலைவா் சுகுணாசங்கா், திமுக நகர இளைஞரணி அமைப்பாளா் சேதுராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.