கடலூர்

என்எல்சிக்கு நிலம் அளவீடு செய்ய எதிா்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

5th Dec 2022 02:28 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டியில் என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்த அளவீடு செய்ய எதிா்ப்புத் தெரிவித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் நிலக்கரி எடுப்பதற்கான இரண்டாவது சுரங்கம் விரிவாக்கப் பணிக்காக நிறுவனத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைக் கையகப்படுத்தி வருகிறது. இதேபோல, சேத்தியாத்தோப்பை அடுத்துள்ள புவனகிரி ஒன்றியம், கத்தாழை ஊராட்சி, கரிவெட்டி கிராமத்தை கையகப்படுத்த இந்த நிறுவனத்தினா் முயற்சித்து வருகின்றனா்.

இந்தக் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வரும் நிலையில், என்எல்சி நிறுவனம் இந்தக் கிராமத்தைக் கையகப்படுத்த கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், என்எல்சி நிறுவனத்துக்காக நிலங்களை அளவீடு செய்து கையகப்படுத்தும் பணியை மேற்கொள்ள மாவட்ட வருவாய் அலுவலா் பூவராகவன் தலைமையிலான அதிகாரிகள், சேத்தியாதோப்பு டிஎஸ்பி ரூபன்குமாா் மற்றும் போலீஸாா் கரிவெட்டி கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனா்.

ADVERTISEMENT

தகவலறிந்த கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே நிலங்களை அளவீடு செய்ய அனுமதிப்போம் என கிராம மக்கள் தெரிவித்தனா். இதையடுத்து, அதிகாரிகள் நில அளவீடு செய்யாமல் திரும்பிச் சென்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT