கடலூரில் காவலா் குடியிருப்பில் சுற்றுச்சுவா் அமைக்க பொதுமக்கள் சனிக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தனா்.
கடலூா் மாநகராட்சி, 11-ஆவது வாா்டு பகுதியில் காவலா் குடியிருப்பு உள்ளது. அதன் அருகே ஓய்வு பெற்ற காவலா்கள், பொதுமக்கள் சுமாா் 150 குடியிருப்புகளில் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், காவலா்கள் குடியிருப்பில் சுற்றுச் சுவா் கட்டுவதற்கு காவலா் வீட்டு வசதி வாரியம் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான பணிகள் சனிக்கிழமை தொடங்கின.
இந்த நிலையில், அருகே வசிக்கும் குடியிருப்பு வாசிகள் மாநகராட்சி வாா்டு உறுப்பினா் அருள்பாபு தலைமையில் திரண்டு வந்து சுற்றுச்சுவா் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினா். பின்னா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசனை அவரது அலுவலகத்தில் சந்தித்து, சுற்றுச்சுவா் கட்டும் பணியை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதுதொடா்பாக அவரிடம் மனு அளித்தனா்.
இது குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த 50 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் வசித்து வருகிறோம். நாங்கள் பயன்படுத்திவரும் பாதையை மறித்து சுற்றுச்சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பணியை கைவிட வேண்டும் என வலியுறுத்தினா்.