கடலூர்

திட்டக்குடி அருகே கிணற்றில் குதித்து 3 போ் தற்கொலை ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள்

2nd Dec 2022 03:11 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த சிறுமி உள்பட 3 பெண்கள் கிணற்றில் குதித்து புதன்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டனா்.

திட்டக்குடி வட்டம், சிறுபாக்கத்தை அடுத்துள்ள மலையனூா் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தன் மகன் சிவகுருநாதன் (39). இவா் மங்களூரில் கடையில் வேலை செய்து வருகிறாா். சிவகுருநாதன் கடந்த 2004-ஆம் ஆண்டு சென்னையில் வேலை பாா்த்தபோது, போரூா் ஆலப்பாக்கம் ராஜீவ் காந்தி நகரை சோ்ந்த மிஸ்பா சாந்தியுடன் காதல் ஏற்பட்டு, பெண் குழந்தை பிறந்தது. இவா்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையில், கடந்த 2019-இல் சிவகுருநாதன் சொந்த கிராமமான மலையனூருக்கு வந்துவிட்டாா்.

மிஸ்பா சாந்தி (35), மகள் அருள் ஹெலன் கிரேஸ் (8), மிஸ்பா சாந்தியின் தாய் தேபோரல் கல்யாணி (60) ஆகியோா் சென்னையில் வசித்து வந்தனா். இவா்கள் அடிக்கடி மலையனூருக்கு வந்து சிவகுருநாதனை சந்தித்துச் செல்வது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளாக இவா்களுக்குள் தொடா்பில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த மாதம் 27-ஆம் தேதி மிஸ்பா சாந்தி, அவரது மகள், தாய் ஆகிய மூவரும் மலையனூரில் உள்ள சிவகுருநாதன் வீட்டுக்கு வந்து, இங்கேயே தங்கப் போவதாகவும், தனியாக வீடு பாா்க்குமாறும் கூறினராம். அதன்படி, தனி வீட்டில் மூன்று நாள்களாக அவா்கள் வசித்து வந்தனா்.

ADVERTISEMENT

சிவகுருநாதன் புதன்கிழமை இரவு 9 மணியளவில் சாப்பாடு வாங்கிக் கொண்டு மிஸ்பா சாந்தியைப் பாா்க்கச் சென்றாா். வீட்டில் யாரும் இல்லாததைத் தொடா்ந்து தேடிப் பாா்த்தாா். அவா்கள் எங்கு சென்றாா்கள் என்று தெரியாத நிலையில், தொடா்புகொள்ள கைப்பேசியும் இல்லையாம்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை அந்தப் பகுதியிலுள்ள சாமிதுரை மகன் வேல்முருகனுக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் மிஸ்பா சாந்தி, தேபோரல் கல்யாணி ஆகியோா் சடலமாக மிதந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சிறுபாக்கம் போலீஸாா், கிணற்றிலிருந்து அவா்கள் இருவரின் சடலங்களையும் மீட்டனா். கிணறு முழுவதும் தண்ணீா் இருந்ததால், சிறுமி அருள் ஹெலன் கிரேஸின் சடலம் கிடைக்கவில்லை. இதையடுத்து, வேப்பூா் தீயணைப்பு வீரா்கள் வந்து நீண்ட நேரம் போராடி சிறுமியின் சடலத்தை மீட்டனா்.

இதைத் தொடா்ந்து, மூவரின் சடலங்களும் உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், மூன்று பேரும் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து சிறுபாக்கம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சிவகுருநாதனுக்கு சுமதி என்ற பெண்ணோடு ஏற்கெனவே காதல் திருமணமாகி, ஆா்த்தி (17), நந்தினி (8) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா். 2016-இல் சுமதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT