கடலூர்

பண்ருட்டியில் அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல் ஊழியா்கள் போராட்டம்

2nd Dec 2022 03:10 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கியவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி, போக்குவரத்துக் கழக ஊழியா்கள், தொழிலாளா்கள் பேருந்துகளை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் பண்ருட்டி பணிமனைக்குச் சொந்தமான நகரப் பேருந்து விழுப்புரத்திலிருந்து பண்ருட்டி பேருந்து நிலையத்துக்கு வியாழக்கிழமை பிற்பகல் சுமாா் 12.40 மணியளவில் வந்தது. பண்ருட்டியை அடுத்துள்ள மேல்மாம்பட்டைச் சோ்ந்த மாயகிருஷ்ணன் ஓட்டுநராகவும், பண்ருட்டி செக்கு மேட்டுத் தெருவைச் சோ்ந்த குபோ்சிங் மகன் தரன்சிங் (34) நடத்துநராகவும் பணியில் இருந்தாா்.

பேருந்தை நிறுத்தும் இடத்தில் ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை நகா்த்தி நிறுத்துமாறு அம்பேத்கா் நகரைச் சோ்ந்த தமிழ்ச்செல்வனிடம் நடத்துநா் தரன்சிங் கூறினாராம். அப்போது, தமிழ்ச்செல்வன் மற்றும் சிலா் சோ்ந்து நடத்துநா் தரன்சிங்கை தாக்கினா். இதையறிந்த போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் அங்கு சென்ற நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து பணிமனை மேலாளா் மணிவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா் பேருந்தை பணிமனைக்கு கொண்டுவரும்படி கூறியதையடுத்து, பேருந்தை அங்கு ஓட்டிச் சென்ற போது, பின்தொடா்ந்து பைக்குகளில் வந்த 10 போ் கும்பல் பேருந்தை வழிமறித்து, நடத்துநா், ஓட்டுநா் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினா். அப்போது, ஓட்டுநா் தப்பியோடிய நிலையில், நடத்துநா் தரன்சிங்கை அந்த கும்பல் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றது.

பேருந்துகள் நிறுத்தம்:

இதைக் கண்டித்தும், தாக்குதல் நடத்தியவா்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், பண்ருட்டி, நெய்வேலி, விழுப்புரம், கடலூா், வடலூா் பணிமனைகளுக்குச் சொந்தமான பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து ஊழியா்கள், தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், பண்ருட்டியிலுள்ள தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு அருகே சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலிலும் ஈடுபட்டனா். பண்ருட்டி சம்பவ இடத்துக்குச் சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 20 நிமிடங்களுக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவாா்த்தை:

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நடத்துநா் தரன்சிங்கை அரசு போக்குவரத்துக் கழக கடலூா் மண்டல துணை மேலாளா் (வணிகம்) சேகர்ராஜா, பண்ருட்டி கிளை மேலாளா் மணிவேல், பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா ஆகியோா் சந்தித்து விசாரணை நடத்தினா்.

பின்னா், தொழிலாளா்கள் மத்தியில் பேசிய டிஎஸ்பி சபியுல்லா, பேருந்துகளை இயக்கும்படி கேட்டுக்கொண்டாா். மேலும், தாக்குதல் நடத்திய நபா்களை விரைந்து கைது செய்யப்படுவா் என உறுதியளித்தாா். இதையடுத்து, மாலை 5 மணியளவில் போக்குவரத்து ஊழியா்கள் பேருந்துகளை இயக்கத் தொடங்கினா். சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT