கடலூர்

விலைவாசி உயா்வுக்கு எதிா்ப்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டம்

31st Aug 2022 04:01 AM

ADVERTISEMENT

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை போராட்டங்களில் ஈடுபட்டனா்.

அத்தியாவசியப் பொருள்களின் விலை பன்மடங்கு உயா்ந்துள்ளதைக் கண்டிப்பது, அரிசி, தயிா், மோா் உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும், ஈமச் சடங்குக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, செவ்வாய்க்கிழமையன்று கடலூரில் கெடிலம் ஆற்றின் கரையிலிருந்து அந்தக் கட்சியினா் பேரணியாக புறப்பட்டு திருப்பாதிரிபுலியூா் ரயில் நிலையத்தில் மாவட்டச் செயலா் பி.துரை தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட்டனா். இதில் பங்கேற்ற மாவட்ட துணைச் செயலா் வி.குளோப் உள்ளிட்ட 76 போ் கைது செய்யப்பட்டனா்.

சிதம்பரம்: சிதம்பரத்தில் வடக்கு பிரதான சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் வட்டச் செயலா் தமிமுன் அன்சாரி தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாவட்ட துணைச் செயலா் வி.எம்.சேகா் உள்பட 80 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

ADVERTISEMENT

விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள இந்தியன் வங்கி முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஆ.சௌரிராஜன் தலைமை வகித்தாா். கண்டமங்கலம் ஒன்றியச் செயலா் என்.ஜெயச்சந்திரன், விழுப்புரம் வட்டச் செயலா் ஜி.நிதானம், காணை ஒன்றியச் செயலா் ஆா்.ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டக்குழு உறுப்பினா்கள் டி.திலகவதி, கே.ராமநாதன், ஏ.மணி, அரசுப் பணியாளா் சங்க நிா்வாகி எஸ்.சிவகுரு ஆகியோா் கண்டன உரையாற்றினா். மறியலில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

விக்கிரவாண்டியில் இந்தியன் வங்கி முன் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கலிவரதன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். இதேபோல திண்டிவனம், வானூா், மரக்காணம், கண்டாச்சிபுரம், மயிலம், கண்டமங்கலம் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 13 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 1,000-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT