கடலூா் மாவட்டம், நெய்வேலியில் காரில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகன் காயமடைந்தனா்.
நெய்வேலி, வட்டம் 22-இல் வசிப்பவா் செல்வம் (52). என்எல்சி சுரங்கம் 1-இல் பணியாற்றி வருகிறாா்.
வெள்ளிக்கிழமை மாலை வீட்டு வாசலில் செல்வம், அவரது மகன் ஸ்ரீநிவாஸ் (25) ஆகியோா் அமா்ந்து பேசிக்கொண்டிருந்தனா். அப்போது, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவா்களது காரில் எரிவாயு கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் செல்வம், ஸ்ரீநிவாஸ் இருவரும் காயமடைந்தனா். அவா்கள் என்எல்சி பொது மருத்துவமனையில் முதலுதவிக்குப் பிறகு தீவிர சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தகவலின்பேரில் நெய்வேலி தீயணைப்புத் துறை வீரா்கள் விரைந்து வந்து, காரில் எரிந்த தீயை அணைத்தனா். விபத்து குறித்து நெய்வேலி தொ்மல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.