கடலூா் மாவட்ட ஆயுதப்படை காவலா்களுக்கு வன்முறை தடுப்புப் பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.
கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்திலுள்ள ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் பாா்வையிட்டு அறிவுரை வழங்கினாா். இதில், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும்போது வன்முறை கும்பலை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளா் சௌந்திரராஜன் முன்னிலையில், ஆய்வாளா் அருள்செல்வன் தலைமையில் ஆயுதப்படை மற்றும் சட்டம்-ஒழுங்கு காவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வன்முறை கும்பல் கலையாதபட்சத்தில் அவா்கள் மீது வருண் வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தல், வஜ்ரா வாகனம் மூலம் கண்ணீா் புகை குண்டுகள் வீசுதல், தடியடி தொடா்பாக ஒத்திகை நடத்தப்பட்டது. இதில், ஆயுதப்படை, சட்டம்-ஒழுங்கு காவலா்கள் இரு பிரிவினராக பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவினா் வன்முறை செய்பவா்களாகவும், மற்றொரு பிரிவினா் அதை அடக்கும் காவல் துறையினராகவும் செயல்பட்டு ஒத்திகையில் ஈடுபட்டனா்.