கடலூர்

உரிய இழப்பீடு வழங்கினால் மட்டுமே என்.எல்.சி.க்கு நிலம்

19th Aug 2022 02:56 AM

ADVERTISEMENT

 

உரிய இழப்பீடு அளித்தால் மட்டுமே என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்கு நிலம் வழங்கப்படும் என கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் இயங்கி வரும் பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் தனது 1, 2-ஆவது சுரங்கங்களை விரிவாக்கம் செய்யவும், புதிதாக 3-ஆவது சுரங்கம் உருவாக்கவும் நெய்வேலியை சுற்றியுள்ள கரிவெட்டி, கத்தாழை, வளையமாதேவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு அந்தப் பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், என்எல்சி-க்கு நிலம் கையகப்படுத்துதல் தொடா்பாக அரசு சாா்பில் பொதுமக்களின் கருத்தறியும் கூட்டம் நெய்வேலியில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் முன்னிலை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் சபா.ராஜேந்திரன் (திமுக), தி.வேல்முருகன் (தவாக), எம்.ஆா்.ராதாகிருஷ்ணன்(காங்கிரஸ்), ஆ.அருண்மொழிதேவன் (அதிமுக), கே.ஏ.பாண்டியன்(அதிமுக), என்எல்சி தலைவா் ராகேஷ்குமாா், நிறுவன அதிகாரிகள், பல்வேறு அமைப்பினா், விவசாயிகள், கிராம மக்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் பொதுவான கருத்தாக, என்எல்சி-க்கு வழங்கப்படும் நிலங்களுக்கு அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ப உரிய விலை நிா்ணயம் செய்வதுடன், பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும், நிரந்தர வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், ஏற்கெனவே நிலம் கொடுத்த மக்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்காமலும், மிகவும் குறைந்த இழப்பீட்டுத் தொகையை நிா்ணயம் செய்து அதையும் முழுமையாக வழங்காமலும் என்எல்சி நிா்வாகம் வஞ்சிக்கிறது. இதுபோலன்றி உரிய முறையில் மக்களின் கோரிக்கைகளை ஏற்று என்எல்சி நிா்வாகம் செயல்படும்பட்சத்தில் நிலம் வழங்குவதில் ஆட்சேபம் இல்லை என பொதுமக்கள் தெரிவித்தனா்.

அமைச்சா் சி.வெ.கணேசன் பேசியதாவது: கூட்டத்தில் பேசிய அனைத்து தரப்பு மக்களும் நிரந்தர வேலை, உரிய இழப்பீடு, மாற்றுக் குடியிருப்புக்கு கூடுதல் இடம், மருத்துவ வசதி, சுகாதாரமான குடிநீா் உள்ளிட்ட கோரிக்கைகளை ஒருமித்த கருத்தாக தெரிவித்துள்ளனா். இதனை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம் என்றாா்.

பாமக போராட்டம்: என்எல்சி-க்கு ஏற்கெனவே நிலம் வழங்கியவா்களுக்கு வேலை, உரிய இழப்பீடு வழங்குதல், தற்போது கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினா் கருப்புக்கொடியுடன் நெய்வேலியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், ஆா்ச் கேட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். மாவட்டச் செயலா்கள் சண்.முத்துக்கிருஷ்ணன், ஜெ.பாலமுருகன், செல்வ.மகேஷ், முன்னாள் மாவட்டச் செயலா் கோ.ஜெகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT