கடலூர்

கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதி மறுப்பு

13th Aug 2022 04:20 AM

ADVERTISEMENT

கடலூரில் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதி மறுக்கப்படுவது தொடா்பாக தமிழக முதல்வருக்கு பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினா் புகாா் மனு அனுப்பினா்.

கடலூா் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அதன் ஒருங்கிணைப்பாளா் வெண்புறா சி.குமாா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள புகாா் மனு:

கடலூா் மாநகர விரிவாக்கத்தை கருத்தில்கொண்டு புதிய பேருந்து நிலையம் கடலூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள எம்.புதூரில் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு, பொதுமக்கள், பல்வேறு அமைப்பினரும் எதிா்ப்புத் தெரிவித்ததைத் தொடா்ந்து ஜூலை 23-ஆம் தேதி பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், பெரும்பாலானவா்கள் எம்.புதூருக்கு பேருந்து நிலையம் செல்ல வேண்டாம் என்ற கருத்தையே பதிவு செய்தனா். ஆனாலும், அமைச்சரும், மாவட்ட நிா்வாகமும் கடலூா் மக்களின் கோரிக்கையை ஏற்கும் நிலையில் இல்லை.

எனவே, பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த அமைப்பு சாா்பில் முடிவெடுக்கப்பட்டது. இதற்காக 3 நாள்கள் தெருமுனை பிரசார இயக்கம் நடத்தவும் திட்டமிட்ட நிலையில் அதற்காக அனுமதி கோரி கடலூா் உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த 4-ஆம் தேதி மனு அளித்தோம். இதனையடுத்து, காவல் கண்காணிப்பாளரை சந்திக்கச் சென்றபோதும் அனுமதி மறுக்கப்பட்டதுடன், மாவட்ட ஆட்சியரை சந்திக்க வேண்டுமென கூறுகின்றனா்.

ADVERTISEMENT

சட்டம்-ஒழுங்கு பிரச்னை இல்லாத, அரசியல் சாா்பற்ற 25 சங்கங்களைக் கொண்டு பொதுநல அமைப்பானது, அரசியல் சாசனத்தில் வழங்கியுள்ள உரிமைகளின்படியே கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளது. ஆனால், மாவட்ட நிா்வாகம் ஜனநாயக உரிமைகளை மறுத்து வருகிறது.

எனவே, கையெழுத்து இயக்கம் நடத்த முதல்வா் அனுமதி வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT