கடலூர்

கடலூா்: விடுதிகளுக்கான பதிவு கட்டாயம்

13th Aug 2022 03:40 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் விடுதிகளுக்கான பதிவு கட்டாயம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூா் மாவட்டத்தில் சிறாா், மகளிா் இல்லங்கள், விடுதிகள் அரசின் தகுதியான உரிமம் பெற்று நடத்தப்பட வேண்டும். அரசு, தனியாரால் நடத்தப்படும் பணிபுரியும், கல்வி பயிலும் குழந்தைகள், மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் பதிவு செய்தல் மற்றும் உரிமை பெறும்முறை அதற்கான நிபந்தனைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன. உரிமம் பெறாமல் இயங்கி வரும் விடுதிகள், இல்லங்கள் உடனடியாக உரிமம் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து தனியாா், அரசு கல்லூரி, பள்ளிகளில் உள்ள தங்கும் விடுதிகளுக்கும் இது பொருந்தும் .

மேலும் விடுதியின் உரிமம் பெற தீயணைப்பு சான்றிதழ், சுகாதார சான்றிதழ், கட்டட உறுதித் தன்மை சான்று உள்ளிட்டவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்டடத்தில் மட்டுமே விடுதி நடத்தப்பட வேண்டும். விடுதியின் பொது வராண்டா பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். பெண் குழந்தைகள், பெண்களுக்கான விடுதி, காப்பகங்களில் விடுதி காப்பாளா், பாதுகாவலா் ஆகியோா் பெண்ணாக இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

நியமிக்கப்பட்ட பாதுகாவலா் காவல் துறையினரால் பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விடுதியில் சோ்க்கை பதிவேடு, நடமாடும் பதிவேடு, விடுமுறை பதிவேடு, பாா்வையாளா் பதிவேடு ஆகியவை கண்டிப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.

உரிமம் பெறாமல் இல்லங்கள், விடுதிகளை நடத்துபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை 04142-221080, 04142-221235 என்ற தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT